Saturday, 7 December 2024

Five star - III

  ”~முந்தய பகுதியை படிக்க இங்கே செல்லவும்~”

Torture பாமா:

Torture பாமா, அலுவல் ரீதியாக ஈகிலுக்கு மூன்று ஆடுக்குகள் மேலே இருப்பவர், அலும்பு ரீதியாக அலுவலகத்தில் உள்ள எல்லோருக்கும் மூவாயிரம் அடுக்குகள் மேலே இருப்பவர். அவர் அலுவலகத்தில் பலருடைய புலம்பலுக்கு காரணமான புண்ணியவதி, அர்த்தமில்லாமல் டார்ச்சர் செய்வதை தன்னலமில்லா தொண்டாக புரிபவர்.

Office meeting துவங்கி, அது வரை நடந்த வேலைகள், அதன் நிலைகள், மானே தேனே பொன்மானே என வழக்கமான உரையாடல்கள் முடிந்தவுடன். அடுத்த கட்ட வேலைகளை பற்றி கூற ஆரம்பித்தார் டார்ச்சர் பாமா. குறிப்பாக பத்து நாட்கள் கழித்து, தான் செல்ல வேண்டிய வெளிநாட்டு பயணம் குறித்தும், அதற்கு தனக்கு தேவை படும் விஷயங்கள் குறித்தும் கூறினார். 

Five star III

அனைவரும் சனி ஞாயிறு என்று பார்க்காமல் வேலை செய்ய வேண்டும் என்று கூறிவிட்டு, போகிற போக்கில் ஈகிலை பார்த்து, “நீ உன்னோட லீவ கேன்சல் பண்ணிக்கோ, உன்னோட Design work both official and personal ரொம்ப தேவை படுது, ஓகே!”, என்று சாதாரணமாக சொல்லி முடித்துவிட்டார்.

அதாவது இந்த பாமாவின் பயணத்திற்காக பாவப்பட்ட சீவன்கள் பலர், பகல் இரவு, சனி ஞாயிறு பார்க்காமல் வேலை செய்ய வேண்டும்.  குறிப்பாக ஈகில் தனது பயணத்திட்டத்தை மொத்தமாக கைவிட வேண்டும்.

ஈகில் கண்ணீர் துளிர்விட ஒரு சிரிப்பு சிரித்துவிட்டு, தனது ஏற்பாடுகளை கேன்சல் செய்ய துவங்கினார். அன்று இரவு வீட்டிற்கு சென்று, அச்சத்துடன் கவனமாக வார்த்தைகளை திரட்டிக்கொண்டு பிரபஞ்ச சுந்தரிக்கு ஃபோனில் கூப்பிட்டு நடந்தவைகளை எடுத்துக்கூறினார்.

மறுமுனையில் பலத்த மௌனத்திற்கு பிறகு சிறு விசும்பலுடன், “Morning பாண்டி பஜார்ல நேர்ல பார்ப்போம்” என்று மட்டும் சொல்லி துண்டிக்கபட்டது. இரவு வேகு நேரம் பதட்டத்துடன் போராடிவிட்டு தூங்கியவரை அதிகாலையில், “தாம்பரம் தாண்டிட்டேங்க, வடபழனி வந்துற்றீங்களா?” என்று ஃபோனில் எழுப்பியிருக்கிறேன் நான்.

Flashback முடிவு :

’சீலை இல்லைன்னு சித்தி வீட்டுக்கு போனா, அவ ஈச்சம் பாயை கட்டிக்கிட்டு எதிரே வந்தாளாம்’ என்கின்ற கதையாக, வாழ்க்கையில் சில பல அடிகளை தாங்க முடியாமல் சென்னைக்கு ஒரு பயணம் சென்று, ஈகிலுடன் கொஞ்சம் ஊர் சுற்றி ஆறுதல் தேடலாம் என்று நான் கிளம்பினேன். ஆனால் இப்போது இவருக்கு நான் எப்படி ஆறுதல் சொல்ல என்று முழித்துக் கொண்டிருக்கிறேன்.

பக்குவமான சில வார்த்தைகளை மனதிற்குள் தயார் செய்துகொண்டு அவரிடம் பேச துவங்கும் முன்பே, பிரபஞ்ச சுந்தரி அங்கே பிரசன்னமாகிவிட்டார். சரி அவர்கள் பேசட்டும் என்று விலகி, பாண்டி பஜார் பாதைகளில் உள்ள கடைகளை வேடிக்கை பார்த்த படியே சிறு நடை போட்டுக்கொண்டிருந்தேன். ஆனாலும் ஆர்வத்தில் என்ன நடக்கிறது என்று தூரத்தில் இருந்து அவ்வப்போது பார்த்துக்கொண்டுமிருந்தேன்.

கடைசியாக கை குலுக்கிவிட்டு பிரிந்த முறையிலிருந்தே, முழுவதும் முடிந்து விட்டதாகவே தோன்றியது. பிரபஞ்ச சுந்தரி பிரிந்து சென்றவுடன் ஈகில் அருகே சென்று அமர்ந்தேன். கண்கள் கலங்கிய நிலையில் என்னை பார்த்து சிரித்தபடி, “Sorry வீட்டுக்கும் போக முடியாது, 11மணிக்குதான் checkin, கொஞ்ச நேரத்துல ரூமுக்கு போயிடலாம்” என்று சொன்னார். 

Five star III

”அத விடுங்க, அவங்க என்ன சொன்னாங்க” என்று நான் கேட்க, “ரெண்டாவது தடவையும் இப்படி ஆயிடிச்சு, கண்டிப்ப உன்னையும் என்னையும் சேர்த்து வைக்க இந்த பிரபஞ்சம் நினைக்கல. இனிமேல் நாம சந்திக்கவே வேண்டாம்ன்னு சொல்லிட்டு போயிட்டாங்க.” என்று சொல்லி மறுபடி சிரித்தார்.

அந்த சிரிப்பு என்னை ஏதோ செய்ய,”உங்களுக்கு எப்படி ஆறுதல் சொல்றதுன்னே தெரியலங்க” என்றேன். அதை கேட்டு கண் கலங்க இன்னும் சத்தமாக சிரித்தார். ஆனால் அந்த பெண் வருவதற்கு முன் இருந்த சிரிப்பிற்கும் இப்போது சிரிக்கும் சிரிப்பிற்கும் ஏதோ ஒரு வித்யாசம் இருந்தது.  

எப்போதுமே ஆறுதல் சொல்வது எனக்கு அவ்வளவு எளிதாக வருவதில்லை. என்ன சொல்லி எப்படி இவரை தேற்றுவது என்று தெரியாமல், ”காலம் எல்லா காயங்களையும் ஆற்றும், அது வரைக்கும் மனச விடக்கூடாது” என்று  சில பல வசனங்களை சொல்லி கொண்டிருந்தேன்.

அதற்கும் சிரித்தார், அந்த சிரிப்பு என்னை உறுத்திக்கொண்டே இருந்தது. ”எல்லாம் ஒரு நாள் சரியாகும், நீங்க வேணும்ன்னா பாருங்க, கண்டிப்பா அவங்க திரும்பி வருவாங்க” என்று நான் கூறியதுதான் தாமதம், “ஏங்க, வாய கழுவுங்க முதல்ல” என்று அசுர வேகத்தில் கத்தினார்.

திரிபும் திகைப்பும்:

”ரொம்பெல்லம் சோகமா இருக்காதிங்க, நானே இப்பதான் நிம்மதியா இருக்கேன்” என்று அவர் கூற, தட்டு நிறைய தவிட்டை முழுங்கிவிட்டு தண்ணீர் கிடைக்காத கோழி போல நான் முழித்துக்கொண்டிருந்தேன்.

Five star III

எனது குழம்பிய முகத்தை பார்த்து மறுபடி சிரித்து விட்டு, “நான் அந்த பொண்ண லவ் பண்ணவே இல்லைங்க.” என்றார்.

“என்னங்க சொல்றீங்க” என்று அதிர்ச்சி தாளாமல் கேட்டேன்.

“அட ஆமாங்க, ஆரம்பத்துல இருந்தே நான் ஃபிரண்ட்லியாத்தான் பழகுனேன். அந்த பொண்ணா லவ்வ சொல்லிக்கிட்டா, என்கிட்ட எந்த பதிலும் கேட்கல. அவளா ஃபோன் பண்ணுவா, பேசுவா, பார்க்க வருவா, மறுபடி பேசுவா, ஏன் கேக்குறீங்க” என்றார்.

”அப்போ லவ் பண்ணலைன்னு சொல்லிருக்க வேண்டியதான? ஏன் சொல்லலை? அது தப்புதான?” என்றேன்.

”நீங்க வேற, அத நான் பல தடவை சொல்லிட்டேன், கேட்டாதான. எப்போ சொன்னாலும் ’உனக்குள்ள லவ் இருக்கு அது உனக்கு சீக்கிரம் தெரியும் பாரு’ன்னு சொல்லுவா” என்கிறார். சிந்தித்து பார்த்தால், அவருடைய குணத்திற்கும் அழகிற்கும் இது நடக்கக்கூடியது தான் என்றே தோன்றியது.

“எல்லாம் சரி, அப்போ முதல் தடவை உங்கள பிரிஞ்சு போனப்ப நீங்க கலங்குனது, ரெண்டு வாரமா தவிப்பும் தத்தளிப்புமா இருந்தது, அதெல்லாம் எதுக்கு?” என்றேன்.

”எங்க திரும்பி வந்து லவ்வு, பிரபஞ்சம்ன்னு உயிர வாங்கிருவாளோன்னு தான். உண்மைய சொன்னா, travel agencyல அவள பார்த்ததுல இருந்து நான் பயத்துல தான் இருந்தேன். Trip cancel ஆனப்ப, காசு போனதை பத்தி கூட நான் கவலை படல, எங்க அவளுக்கும் எதாவது பிரச்சனைல Trip cancel ஆகி, ’இதுவும் பிரஞ்ச செய்கை’ன்னு சொல்லிருவாளோன்னு தான் பயந்தேன். இது எப்படியாவது முடிஞ்சா சரி தான்னு இருந்தது, ஒரு வழியா முடிஞ்சும் போச்சு. அது தான் இந்த ஆனந்த கண்ணீரும், வெற்றி சிரிப்பும்” என்றார்.

”அப்போ ‘Toxic தம்பதி, Torture பாமா’ எல்லாம் உங்களுக்கு உதவி தான் பண்ணியிருக்காங்க, இல்லையா?” என்றேன். “அவங்க மட்டும் இல்ல ’பிரபஞ்சம், விதி’ இதையும் சேர்த்துக்கோங்க” என்றார் சிரித்துக்கொண்டே.
”கொய்யால, உங்களுக்காக இவ்வளவு நேரம் உயிர குடுத்து Feel பண்ணிகிட்டு இருந்தனேங்க” என்றால், “நீங்க ஒரு லூசுங்க” என்கிறார். 

நேரமாகி விட்டது என்று ரூமை நோக்கி செல்லும் போது, “ஏன், உங்களுக்கு காதல், கல்யாணம் இதெல்லாம் பிடிக்கிறதில்ல?” என்றேன். “பிடிக்கிறதில்ல, அதுதான் reason, அதுக்கு எதுக்கு reason” என்கிறார்.

அதிர்ச்சியும் ஆச்சர்யமும் இன்னும் அடங்காமல், ”தெளிவா தப்பிச்சுடிங்களே?” என்றால். “அதுக்காக எந்த ஒரு வேலையும் செய்யாமலே” என்கிறார். வழியில் ஒரு விளம்பரம் கண்ணில்பட்ட போது, எனக்குள் சிறு புன்னகை அரும்பியது .

“Eat 5star”… “Do Nothing”… 

 ---  Phoenix

2 comments:

  1. OMG, nan kuda True love failure nu think panni romba feel pannean poga, bro....

    ReplyDelete