Saturday, 30 November 2024

Five star - II

 ”~முந்தய பகுதியை படிக்க இங்கே செல்லவும்~”   

 Toxic தம்பதி:

Toxic தம்பதி, ஈகில் குடியிருக்கும் அப்பார்ட்மெண்டில் வசிக்கும் இவர்கள், டாக்சிசிட்டியை முதன்மை பணியாக எடுத்து அதை முழு பொறுப்புடன் செய்து வரும் ஒரு தன்னிகரில்லா தம்பதி. தனது வாசலின் அருகே யாராவது தெரியாமல் வண்டியை நிறுத்தினால் கூட, அந்த வண்டியை நடுரோட்டை மறைத்தபடி நகற்றி வைக்கும் நற்பண்புள்ளவர்கள்.

குறிப்பாக Bachelors என்றாலே பிடிக்காதவர்கள், அவர்கள் எது செய்தாலும் தவறு என்று சொல்பவர்கள். இவ்வளவு ஏன், பெட்ரோல் விலையேற்றத்திற்க்கே Bachelors தான் காரணம் என சொல்லகூடியவர்கள். (பெட்ரோல் விலைக்கு காரணம் வேறு ஒரு Bachelor என்று நாம் சொன்னாலும் அங்கு செல்லாது).

நமது கதாபாத்திரங்கள் காதலை பற்றி விவாதம் செய்து கொண்டிருந்த அதே நேரத்தில், அங்கே அப்பார்ட்மெண்டில் காப்பி மிக்சருடன் கலவரம் நிறைந்த ஒரு மீட்டிங் நடந்து முடிந்திருந்தது.

ஈகிலின் அப்பார்ட்மண்டில் 3வது தளத்தில் வசிக்கும் Bachelor, ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்ததை பார்த்துவிட்டனர் இந்த Toxic தம்பதிகள். பசியில் இருந்தவருக்கு பாதாம் அல்வா கிடைத்ததை போல, Bachelors மேல் வன்மத்தில் இருந்தவர்களுக்கு வகையாக சிக்கியது இந்த சம்பவம்.

வந்த பெண் அந்த இளைஞனது தோழியா, காதலியா, யார் எவர் என்று எதுவும் தெரியாமல், தெரிந்துகொள்ளவும் விரும்பாமல், பிரச்சனையை கிளப்பி விட்டனர். உடனடியாக இருக்கைகள் சுத்தம் செய்யப்பட்டது, இந்திரா பேக்கரியில் காப்பி மிக்சர் வாங்கப்பட்டது, அப்பார்மெண்ட் மீடிங் போடப்பட்டது. 

Five star II

மீடிங்கில் சீறி பாய்ந்த தம்பதியினர், முக்கியமான மூன்று தீர்மானங்களை முன்வைத்தனர்.

  1. அந்த 3வது மாடி இளைஞன் அப்பார்மெண்டில் இருந்து உடனடியாக வெளியேற்ற பட வேண்டும்.
  2. இனி Bachelors யாரும் இங்கு வசிக்கவே கூடாது.
  3.  Swiggy, Zomato, courier கொண்டு வரும் ஆட்கள் கூட, திருமணம் ஆகவில்லை என்றால் காம்பவுண்டுக்குள் கால் வைக்கக் கூடாது.

காரசாரமான விவாதங்களும் காப்பிகளும் முடிந்த பிறகு, முதல் மற்றும் மூன்றாவது தீர்மானங்கள் அதே முறையிலும், இரண்டாவது தீர்மானம் சிறிது மாற்றப் பட்டு, ’ஏற்கனவே இருக்கும் Bachelors இங்கே வசிக்கலாம், ஆனால் அவர்களின் விருந்தினர் என யாரும் வர அனுமதி இல்லை’ என்று நிறைவேற்றப் பட்டது.  

இது அனைத்தையும் கேட்ட அந்த பிரபஞ்ச சுந்தரிக்கு கண்கள் குளமாகி அதில் காண்டாமிருகமே குளிக்கும் அளவிற்கு கண்ணீர் வந்தது. கண்ணை துடைத்துக் கொண்டு கம்மிய குரலில், ”விதி நம்ம கூட விளையாண்டு பார்க்குதா, இல்ல நாம சேரவே கூடாதுன்னு சொல்லுதான்னு தெரியல. எதுக்கும் நாம கொஞ்ச நாள் பிரிஞ்சிருப்போம். இந்த பிரபஞ்சம் நம்மை சேர்க்க நினைத்தால் கண்டிப்பாக சந்திப்போம்”, என்று சொல்லி கலக்கத்துடன் இருக்கும் ஈகிலின் முகத்தை கூட பார்க்காமல் அங்கிருந்து சென்றுவிட்டார்.   

விதியின் பயணம்:

அடுத்து வந்த இரண்டு வாரங்களும், ஈகில் தவிப்பிலும், தத்தளிப்பிலும் நாட்களை கழித்தார். உள்ளிருந்த பயத்தை யாரிடமும் பகிர்ந்துகொள்ளாமல் இருந்தார். யாரிடம் சொல்ல முடியும், ஸ்பேரோவிடம் சொன்னால் அவர் அறை லூசு மாதிரி ஏதாவது சொல்லுவார். சரி என்னிடம் பேசலாம் என்றால், ஸ்பேரோவாவது அறை லூசு மாதிரிதான், நானெல்லாம் முழு லூசு. எங்களை வைத்துக் கொண்டு ஈகில் என்னதான் செய்வார் பாவம்.   

இரண்டு வாரங்களுக்கு பிறகு, வெகு நாட்களாக அலுவலகத்தில் விண்ணபித்து காத்திருந்த விடுமுறை கிடைக்கவே, ஒரு பயணத் திட்டத்தை போட்டார். பயணம் எப்போதுமே அவரை நன்றாக உற்சாக படுத்திவிடும்.

மலேசியா செல்ல திட்டமிட்டு, ஒரு Travel angency உள்ளே அமர்ந்து, அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொண்டிருக்கும் நேரத்தில், எதார்தமாக திரும்பிப் பார்த்தால், அருகில் பிரபஞ்ச சுந்தரி. இதில் வியப்பு என்னவென்றால், அந்த பெண்மணியும் அதே நாளில் அதே விமானத்தில் மாலேசியாவில் உள்ள தன் அக்கா வீட்டிற்க்கு சொல்கிறார். 

Five star_II

ஈகிலின் பயணத் திட்டதையும், அவரும் தன்னுடன் வரப்போகிறார் என தெரிந்த போது, பஞ்சத்தில் வாடியவனுக்கு பட்டர் ரொட்டி கிடைத்ததை போல் இருந்தது பிரபஞ்ச சுந்தரிக்கு.

“நான் சொன்னேல, கண்டிப்பா நம்மல இந்த பிரபஞ்சம் சேர்த்து வைக்கும்ன்னு” என்று சொல்லி மகிழ்ச்சியில் திழைத்திருந்தார். பயணதிற்கான மற்ற ஏற்பாடுகளையும் செய்ய துவங்கி, பயண தேதிக்காக ஒருவர் தவிப்புடனும், மற்றொருவர் அச்சத்துடனும் காத்திருந்தனர்.

நான்கு நாட்களில் பயணம் என்ற நிலையில், அதிகாலையில் ஈகிலுக்கு அவருடைய மெனேஜரிடம் இருந்து ஒரு ஃபோன், ”அவங்க மறுபடி ஒரு ஆப்பு வச்சுடாங்க, Morning urgent meeting இருக்கு சீக்கிரம் வந்துரு” என்று. 

(தொடரும்...)

                                                                                                                            ---  Phoenix

 

0 comments:

Post a Comment