Friday, 11 October 2024

தொட்டில் குழந்தை

காலை 10 மணி, வேறு வழியில்லாமல் வெயிலில் சுற்றிக் கொண்டிருக்கும் போது ஒரு ஃபோன். ஸ்பெரோ மதுரைக்கு வந்திருப்பதாகவும், உடனே சென்று பார்க்கும் படியும் ஈகிலிடமிருந்து அன்புக்கட்டளை.

மீற முடியாமல் உடனே போய் பார்த்தால், ஒரு அதிர்ச்சி.  தனது வலது கையை தொட்டிலில் போட்டு, குழந்தையை பேனும் தாய் போல, அமைதி அரும்பிய சிரிப்புடன் அமர்ந்திருந்தார். பெங்களூருவில் ஒரு விபத்தை சந்தித்து, இப்போது மெது மெதுவாக நலம் பெற்று வருகிறார். 

 ஆனால் இப்போது பிரச்சனை அதுவல்ல, இந்த விபத்து சம்பவம் இங்கு பெரும் அதிர்வலைகளை கிளப்பி உள்ளது. இந்த சம்பவம் குறித்து பலரும் பல தகவல்களை கூறி வரும் நிலையில், அவை அனைத்தையும் ஆராய்ந்து, நம் நேயர்களுக்கு தெள்ளத் தெளிவாக எடுத்துக்கூறும் பொறுப்பை ஈகில் என்னிடம் ஒப்படைத்துவிட்டார். (சொல்றது என்னமோ ஈஸிதான்… செய்யிறது எவ்வளோ கஷ்டம் தெரியுமா…) சரி என்று நானும் ஒரு புலனாய்வு பூசணிக்காயாக மாறி, விசாரனையை ஸ்பெரோவிடமே துவங்கினேன்.

இச்சம்பவம் குறித்து ஸ்பெரோ கூறியது யாதெனில்,

”சம்பவம் நடந்தது நான் வேலைக்கு போய்கிட்டு இருக்கும் போது. எனக்கு வலது பக்கம், நடு ரோட்டுல படு வேகமா ஒரு கார் வருது. அதை தவிர்க்கலாம்ன்னு நான் வண்டிய திருப்ப, அதே நேரம் இடது பக்கம் ஒரு ’இளங்கிழவி’ தன்னோட வண்டிய தாறுமாறா ஓட்டிகிட்டு வந்தாங்க.

நடுவுல மாட்டிக்கிட்ட நான், அந்த ரெண்டு பேருக்கும் எந்த பாதிப்பும் வரக்கூடாதுன்னு ஒரு பெருந்தன்மையான முடிவெடுக்க, அந்த தியாகத்தின் பலனா தரையில மல்லாந்து கிடந்தேன். விளைவு, இன்னைக்கு கைய தொட்டில்ல போட்டு, ஆஃபிஸுக்கும் லீவு போட்டு, மதுரைல உக்காந்து மகாநதி சீரியல் பார்த்துட்டு இருக்கேன்”.

இவருடைய கதை இப்படி இருக்க, சம்பவத்தில் சம்மத்தப்பட்ட அந்த பெண்ணை தொடர்பு கொண்டேன். அவர் நமது ‘Born with தகர spoon’ நேயர்களில் ஒருவர் என்பது இன்ப அதிர்ச்சி. சம்பவம் குறித்து அவரிடம் கேட்ட போது, அவர் சொன்ன வெர்ஷனே வேற மாதிரி இருந்தது. 

 அப்பெண்மணி கூறியது யாதெனில்,

”First of all அவர் சொன்னது போல நான் இளங்கிழவி இல்ல, ஒரு இளம் பெண்தான். சரி விடுங்க, ‘பெங்களூரே தமிழ்நாடுதான்’னு நினைக்கிற innocent fellow அவரு.

சம்பவம் நடந்தப்ப, ரோட்டுல எனக்கு கொஞ்சம் முன்னாடிதான் he was going. நான் அவர்கிட்ட பேசனும்ன்னு thoughtல இருக்கும் போதே, கார்ல வந்த ஒருத்தர் என்ன cross பண்ணி போய் அவர்கூட பேசுனார்.

பேசும் போது அந்த கார்காரர், சர்கார் இந்த ரோட்ட சரியா போடலைன்னு சொன்னதுதான் தாமதம், அடுத்த ஸெகெண்டே ரோட்டோட தரத்தை செக் பண்ண, ஓடும் வண்டியில இருந்து ஒய்யாரமா குதிச்சிட்டார். An accident happened you know. Country மீதான அக்கரையில, கைல அடிபட்டதுதான் அவருக்கு மிச்சம்.”

அந்த பெண்மணி இப்படி கூற, குழம்பிப்போய் அந்த கார் ஓட்டியவரை தேடிப் பிடித்து தொடர்பு கொண்டபோது, அவர் சொன்ன கதை இன்னும் வேற மாதிரி இருந்தது. 

 கார் ஓட்டியவர் கூறியது யாதெனில்,

”எனக்கு அவங்க யாரு என்னானு தெரியாது, நான் பாட்டுக்கு வேலைக்கு போயிட்டு இருந்தேன். நடு ரோட்டுல ரெண்டு வண்டி, ஒன்ன ஒன்னு முந்துற முயற்சியில, போட்டி போட்டு போயிட்டு இருந்தது. அதுல ஒருத்தர் பேரிளம் பெண், இன்னொருத்தரோட வயச கணிக்க முடியல. ஆனா ஒன்னு மட்டும் நல்லா தெரிஞ்சிது, அவர் ஒரு உன்னத ஒளி கொண்டவரா இருந்தாரு.  

அவங்க போட்டியின் ஒரு கட்டத்துல, அந்த பொண்ணு வண்டில இருந்து விழுகுற மாதிரி ஒரு அக்டிங்க போட்டாங்க. அந்த மனுஷன் விஷயம் புரியாம பதறிப் போயி அவங்கள காப்பாத்த கை நீட்ட, அந்த பொண்ணு கம்பி நீட்டிட்டு போய்டாங்க. பாவம் அவர்தான் அதனால பேலன்ஸ் இழந்து, ‘பெப்பரப்பே’ன்னு ரோட்டுல கிடந்தாரு. அப்பவும் அந்த உன்னத ஒளி மட்டும் குறையவே இல்ல“

என்ன சோதனை இது, ஒரு சம்பவத்திற்கு இத்தனை கதைகளா, என நான் திகைத்துக் கொண்டிருக்கும் வேலையில், ஒரு ஃபோன் வந்தது. அதில் கிடைத்த செய்தியோ என்னை திக்குமுக்காட செய்தது.

 ஃபோனில் கிடைத்த செய்தி யாதெனில்,

“வணக்கம், நான் யாருன்னு கேக்காதீங்க, I want to stay anonymous. ஸ்பேரோவுக்கு நடந்த சம்பவத்த பத்தி நீங்க விசாரிக்கிறதா கேள்விபட்டேன், அதான் நானே கூப்பிட்டேன்.

அவங்க மூனு பேர் சொல்றதும் பொய் சார். உங்களுக்கு ஸ்பெரோவ பத்தி நல்லாவே தெரிஞ்சிருக்கும், திடீர்ன்னு தீவிர முயற்சிகள்ல இறங்க கூடியவர். தான் ஒரு Insta influencer ஆகனும்ன்னு ரொம்ப நாள் ஆசை அவருக்கு. அதனால கொஞ்ச நாள் முன்னாடி, வேற பேர்ல ஒரு Insta profile open பண்ணி, பெங்களூருல பிரபலம் ஆகி, followers சொல்ற சில பல tasks எல்லாம் செஞ்கிட்டு இருக்கார்.

அதுல ஒரு follower ‘எங்களுக்காக ஒரு பொண்ணு முன்னாடி பைக்குல கெத்து காட்டுங்கண்ணா’ன்னு சொல்ல, இவரும் ‘இதோ உங்களுகாக’ன்னு சொல்லி, சாகஸம் பண்ண போய் சம்மந்தம் இல்லாம விழுந்து கிடந்தாரு.

நான் சொல்றது உண்மை சார், ஏன்னா, அவருக்கு videos எடுக்குறதே நான் தான்.”  

இதை கேட்ட எனக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் போல் இருந்தது, ராஜேஸ் குமார் நாவலில் கூட இப்படி ரணகலமான திருப்பங்களை நான் இதுவரை படித்தில்லை.

 ஆக நான்கு பேர் நான்கு விதமா அந்த சம்பவத்த விவரிக்க, நான் ஈகிலுக்கு இதை அப்படியே எடுத்து சொல்லி, இது வேலைக்கு ஆகாது என்று கூறினேன். ஆனால் அவரோ இதை விடுவதாக தெரியவில்லை,”உண்மையை கண்டுபிடிக்க உங்களால் முடியும், உங்களால் மட்டும்தான் முடியும், எத்தனை நாள் ஆனாலும் சரி தொடந்து விடாமுயற்சியில் இறங்குங்கள், வெற்றி நமதே” என்கிறார்.

எனக்கு கடுப்பு வந்து, “யோவ், இதுல எது உண்மைன்னு கண்டுபிடிக்கிறது ஷெர்லாக் ஹோம்ஸுக்கே சிரமமான காரியம், இதுல ‘விடாமுயற்சி, வெற்றி’ன்னு அஜீத், விஜய் ரெஃப்ரன்ஸ் வேற, ஃபோன வைங்க”ன்னு சொல்லி முடித்தேன்.

ஆனால் இவ்வளவு நடந்தும், இந்த சம்பவத்தில் இன்னும் என் மனதை பிசையும் கேள்வி என்ன தெரியுமா? ,”ஸ்பெரோவின் கண்களுக்கே கிழவியாக தெரிந்த அந்த பெண்மணி, எந்த அடிப்படையில் தன்னை ஒரு இளம் பெண்ணாக நினைக்கிறார்?” என்னவோ போங்க!...

                                                                                                                         ---  Phoenix

                                 

3 comments: